கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 20 Oct 2021 5:33 PM IST (Updated: 20 Oct 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூரில் இளம்பெண் சாவுக்கு நீதி கேட்டு குடும்பத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சி அழுததால் பரபரப்பு

திருப்பூர்
குன்னத்தூரில் இளம்பெண் சாவுக்கு நீதி கேட்டு குடும்பத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஊத்துக்குளி தாலுகா புதுக்காலனி, நவக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் வந்தனர். பின்னர் பெண் சாவுக்கு நீதிகேட்டு கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, கலெக்டர் அலுவலக அதிகாரி ரமேஷ் ஆகியோர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பொன்னம்மாள் வயது 49 என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
எனது மகள் பானுப்பிரியா என்கிற நந்தினி21 5 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 வயது, 2 வயதில் 2 மகள்கள் உள்ளனர். குன்னத்தூரில் குடியிருந்து வந்தனர். பிரபுவுக்கு மதுப்பழக்கம் உள்ளது. மேலும் எனது மகளிடம் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், நகை ஆகியவற்றை கணவரின் வீட்டார் கேட்டனர். மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்து விட்டோம். பொங்கல் பண்டிகைக்கு நகை வாங்கி கொடுக்கிறோம் என்றோம். அதன்பிறகும் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம்.
காலில் விழுந்து கெஞ்சிய பெண்கள்
அதன்பிறகு கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 30ந் தேதி இரவு எனது மகள் அவளுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்த்தபோது உடலில் காயத்துடன் எனது மகள் தூக்கில் பிணமாக கிடந்தாள். குன்னத்தூர் போலீசில் எனது மகள் சாவில் மர்ம இருப்பதாக புகார் செய்தோம். தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ஆர்.டி.ஓ.விசாரணையும் நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். என் மகள் இறப்புக்கு காரணமான பிரபு மற்றும் ஆறுமுகம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவள் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாரின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சியபடி கதறி அழுதனர். இன்று வியாழக்கிழமை குன்னத்தூர் போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-

Next Story