திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள்- அலுவலக பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை


திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள்- அலுவலக பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2021 7:53 PM IST (Updated: 20 Oct 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசு கல்லூரிகளில் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசு கல்லூரிகளில் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் சிரமப்பட்டு வருகிறார்கள். நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நேற்று கல்லூரியில் நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்தை அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

சங்க நிர்வாகிகள்

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், இந்திய மாணவர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், வட்டார தலைவர் அலெக்சாண்டர், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள் செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில பேராசிரியர் யோகபிரகாசம் நன்றி கூறினார்.

நன்னிலம்

நன்னிலத்தில் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு 60 கவுரவ பேராசிரியர்கள் மற்றும் 8 அலுவலக உதவியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக்கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கவுரவ பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு பல்கலைக்கழகமே ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது.
அரசின் இந்த உத்தரவை ஏற்று அனைத்து பல்கலைக்கழகங்களும் ஊதியம் வழங்கி வருகின்றனர். ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் ஊதியம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தும், 5 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரியும் நேற்று கல்லூரி வளாகத்தில் கவுரவ பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

Next Story