ஊட்டியில் ஒரே பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா
ஊட்டியில் ஒரே பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா
ஊட்டி
ஊட்டியில் ஒரே பள்ளியில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா உறுதியானது. பரவலை தடுக்க 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
7 பேருக்கு தொற்று
நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
ஊட்டி தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சில பள்ளிகளில் கடந்த 18-ந் தேதி சுகாதார குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக பள்ளி விடுதிகளில் இருந்து தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்று வந்த மாணவர்கள் உள்பட மொத்தம் 530 பேரிடம் மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவு நேற்று வந்தது. அதில் ஊட்டி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவர்கள் பள்ளியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிகளில் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளி மூடல்
இதைத்தொடர்ந்து சுகாதார குழுவினர் நேற்று பள்ளியில் முகாமிட்டு மாணவிகள், ஆசிரியர்கள் என 300 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பரவலை தடுக்க தனியார் பள்ளி மூடப்பட்டு உள்ளது.
மறு உத்தரவு வரும்வரை பள்ளியை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஊட்டி நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பள்ளி வகுப்பறைகள், வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
ஒரே பள்ளியில் பயிலும் 7 மாணவிகளுக்கு தொற்று பாதித்ததால் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. பிற பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story