தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 8:59 PM IST (Updated: 20 Oct 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

ஊர் பெயர் பலகையை திருத்த வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் இளையாளூர் அறங்கக்குடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து ஊர் பெயர் பலகை வைக்கும் பணி நடந்தது. இதில் ஊர் பெயர் பலகை வைக்கும் போது அறங்கக்குடி என்பதற்கு பதிலாக வடகரை என வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஊர் பெயர் தவறாக உள்ளதால் வாகன ஓட்டிகள் குழம்பி போய் விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஊர் பெயர் பலகையை மாற்றி அறங்கக்குடி என்று திருத்தம் செய்து அமைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். 
- பொதுமக்கள், அறங்கக்குடி.
இடிந்து விழும் நிலையில் படித்துறை
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் நடுத்தெரு உள்ளது. இந்தபகுதியில் துவர்குளம் உள்ளது. இந்த குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறை மூலம் அப்பகுதி மக்கள் பயனடைந்து வருந்தனர். தற்போது இந்த குளத்தின் படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய நிலையில் உள்ள குளத்தின் படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஜெயக்குமார், வடக்கு பொய்கை நல்லூர்.
வீணாகும் குடிநீர்
நாகை மாவட்டம் ஆரிய நாட்டு தெரு 5-வது சந்தின் மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் அடைப்பான் இல்லாததால் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து விடுகிறது. இதனால் தினமும் அதிகமான குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல் அதே பகுதியில் உள்ள மற்றொரு குடிநீர் குழாயில் இருந்தும் தண்ணீர் வீணாகி வருகிறது.  . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாகி கழிவு நீர் கால்வாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். 
-கரிகாலன், நாகப்பட்டினம்.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகில் கோவில் திருமாளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக காரைக்கால் செல்லும் சாலை உள்ளது. இதில் பழைய பஞ்சாயத்து அலுவலகம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள்  மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வெயிலில் நின்றும், மழையில் நனைந்தும் பஸ் ஏறிவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராமமக்கள், நன்னிலம்.




Next Story