21 குண்டுகள் முழங்க வடமதுரை ராணுவ வீரரின் உடல் அடக்கம்
அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்தபோது திடீரென இறந்த வடமதுரை ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 43). இவர், அருணாசலபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 18-ந்தேதி சடையப்பன், சக ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இந்திய-சீன எல்லையான ஓரக் என்ற இடத்தில் பீரங்கியை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நிலவிய குளிர் மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக ராணுவ வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சடையப்பன் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சடையப்பனின் உடல், நேற்று அதிகாலை அவரது சொந்த ஊரான வாலிசெட்டிபட்டிக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு சடையப்பனின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, வி.பி.பி.பரமசிவம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை ராணுவ வீரர்கள் எடுத்து, சடையப்பனின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ராணுவ மேஜர் சங்கல்ப் சர்மா, கேப்டன் குல்தீப்சிங் ராணா ஆகியோர் தலைமையிலான ராணுவ வீரர்கள் மூலம் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு சடையப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story