சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடி:
கோவில்களில் அன்னாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
ஐப்பசி பவுர்ணமி
ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் குரு மகாலிங்கேசுவரரை அன்னாபிஷேகம் செய்து வணங்கினால் வறட்சி, பஞ்சம் நீங்கும். பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் சிறக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தூத்துக்குடி அருகே பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயத்தில் உள்ள குருமகாலிங்கேசுவரரான சிவபெருமான் மற்றும் நந்திக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குருமகாலிங்கேசுவரர் அன்னாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் போகவும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிட வேண்டியும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செண்பகவல்லி அம்மன்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 10 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அன்னாபிஷேக சிறப்பு ஹோமம் நடந்தது. 10.45 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீருக்கு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பூவனநாத சுவாமிக்கு அன்ன பாலிப்பு செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிறப்பு பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் அன்னாபிஷேக விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சப்த கன்னி, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சங்கரலிஙக் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சங்கரராமேசுவரர்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. காலை முதல் சிறப்பு பூஜைகள் ,அன்னாபிஷேக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில் சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
சிவன் கோவில்
ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மளவராயநத்தத்தில் ஆன்மிக சிறப்பு பெற்ற ''தென்னகர் சிவன் கோவில்'' அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் அறம்வளர்த்த நாயகி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்க அன்னாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷே வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து அன்னத்திலான சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்பு பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story