ரவுடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு
ரவுடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண் மனைவி கஸ்தூரி என்பவர் நேற்று தனது 2 மகன்கள் மற்றும் உறவினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.
திடீரென அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொள்ள முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரி கூறுகையில், வளவனூரை சேர்ந்த ரவுடி தீபக்ராஜ் எனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததால் நான் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
தற்போது அவரது தரப்பினர் சிலர் எங்களை வழக்கை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story