மேல்மலையனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பலி நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் சோகம்
மேல்மலையனூர் அருகே நண்பனின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வந்த இடத்தில், மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே ரவணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் தட்சிணாமூர்த்தி (வயது 21). திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார்.
இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அதே கல்லூரியில் படிக்கும், அவரது நண்பர்களான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா வளவனூர் கிராமத்தை சேர்ந்த வீரமபத்திரன் மகன் நித்தீஷ் (21), வந்தவாசி தினேஷ் (21) மற்றும் நண்பர்கள் சிலர் ரவணாம்பட்டுக்கு வந்தனர்.
பிரியாணி சமைத்தனர்
அங்குள்ள ஒரு நிலத்தில் பிரியாணி சமைத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து ஒரு தார்ப்பாயை எடுத்து அதை பிடித்தபடி நித்தீஷ், தினேஷ் ஆகியோர் நின்று சமையல் செய்துள்ளனர். இந்த நிலையில் மின்னல் ஒன்று அவர்கள் மீது தாக்கியது. இதில் நித்தீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த தினேஷ் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நித்திஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story