அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பாதுகாப்பற்ற குடிநீரை பார்த்து அமைச்சர் அதிர்ச்சி


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பாதுகாப்பற்ற குடிநீரை பார்த்து அமைச்சர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2021 10:50 PM IST (Updated: 20 Oct 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பாதுகாப்பற்ற குடிநீரை பார்த்து அமைச்சர் சி.வி.கணேசன் அதிர்ச்சி அடைந்தார்.

தேனி: 


அமைச்சர் ஆய்வு
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி ஆண்டிப்பட்டி, தேனி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் மரக்கன்று நட்டு வைத்து, அங்கு ஆய்வு செய்தார். அப்போது அங்கு உள்ள மாணவ, மாணவிகளுக்கான கழிப்பிடங்களை பார்வையிட்டார். அந்த கழிப்பிடங்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியது. அதை சுட்டிக் காட்டிய அமைச்சர், இதுபோன்ற சுகாதாரக்கேடு இல்லாமல் கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாதுகாப்பற்ற குடிநீர்
பின்னர் அலுவலக வளாகத்தை பார்வையிட்ட போது அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியும், குப்பைகள் முறையாக அகற்றப்படாமலும் கிடந்தது. அதைப் பார்த்து அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம், "மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் முக்கியம். வளாகத்தை இப்படி அசுத்தமாக வைத்து இருந்தால் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் எப்படி உருவாகும். ஓரிரு நாட்களில் இதை சுத்தம் செய்து விட்டு எனக்கு புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

அங்குள்ள ஒரு அறையில் இலவச சைக்கிள்கள் தூசி படிந்த நிலையில் கிடந்தன. அவற்றை பராமரித்து மாணவ, மாணவிகளிடம் வழங்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அறைக்கு வெளியே இருந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் பறவைகள் கூடு கட்டியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைத்திருந்த கேன் சேதம் அடைந்து குடிநீரில் தூசி படிந்தும் காணப்பட்டது. அதை அமைச்சர் பார்வையிட்டு, பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்ட அந்த குடிநீர் கேனை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கேன் அகற்றப்பட்டு குடிநீர் தரையில் கொட்டப்பட்டது.

புதிய தொழிற்படிப்புகள்
மேலும், அங்கு மாணவ, மாணவிகளின் படைப்புகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதை அமைச்சர் பார்வையிட்டு மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார். ஆய்வைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். குடிநீர், கட்டிட வசதி, சுகாதார வசதி போன்றவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தி வருகிறேன். படித்து முடித்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்காக புதிய தொழிற்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்யவும், கழிப்பிடம் மற்றும் வளாகத்தை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இயக்குனர் வீரராகவராவ், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story