காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பண்ருட்டி போலீஸ் நிலைய மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் போலீஸ் நிலைய மாடியில் ஏறி இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பட்டதாரி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரம் பாலூர் ரோட்டை சேர்ந்தவர் சேகர் மகள் சத்யா (வயது 23). பி.காம். பட்டதாரியான இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஏற்கனவே பண்ருட்டியில் உள்ள வேறு ஒரு கடையில் வேலை பார்த்த போது, அங்கு தன்னுடன் வேலை பார்த்து வந்த பழைய பிள்ளையார்குப்பம் விஸ்வலிங்கம் மகன் சதீஷ் (28) என்பவருடன் பேசி பழகி வந்தார். சதீஷ் டிப்ளமோ மெக்கானிக் முடித்துள்ளார்.
திருமணம் செய்ய மறுப்பு
இதையடுத்து 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது சதீஷ், சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு சதீஷ், சத்யாவை விட்டு விலக தொடங்கியதோடு அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
தகவல் அறிந்ததும் சத்யாவின் பெற்றோர் சதீசின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் சத்யா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் சதீஷ் மீது புகார் செய்தார்.
தற்கொலை முயற்சி
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி நேற்று விசாரணைக்காக இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது சதீஷ், சத்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இதை கேட்ட சத்யா மிகவும் வேதனை அடைந்தார். பின்னர் அவர் மனஉளைச்சலில் வெளியே வந்து, தன்னுடைய தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென அருகில் இருந்த பண்ருட்டி சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலைய மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றார்.
பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, ஓடிச்சென்று அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றினர்.
கைது
தொடர்ந்து சதீஷ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற சத்யா மீதும் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இருப்பினும் இந்த சம்பவத்தால் பண்ருட்டி போலீஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story