செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பு பணி தீவிரம்


செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Oct 2021 11:16 PM IST (Updated: 20 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்காக காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விற்பனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

காரைக்குடி, 
தீபாவளி பண்டிகைக்காக காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விற்பனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
செட்டிநாட்டு பலகாரங்கள்
தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து உறவினர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு சுவையான பலகாரங்களை கொடுத்து வாழ்த்து கூறுவது தான். 
கடந்த காலங்களில் ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் உள்ள பெரியர்கள் தங்களது கை பக்குவதத்தில் வீடுகளிலேயே பல சுவையான பலகாரங்களை செய்து சாப்பிட்டும், அதை தங்களது உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து மகிழ்ந்து வந்தனர். 
ஆனால் காலப்போக்கில் தற்போது ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் பலகாரங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் செட்டிநாடு என்று அழைக்கப் படும் காரைக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பலகாரங் களுக்கு என்று தனி மவுசு உள்ளது.
தனிமவுசு
இங்கு தயாரிக்கப்படும் இந்த செட்டிநாட்டு பலகார பொருட்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்கள், சுபநிகழ்ச்சிகளுக்காக சீர் வரிசை பொருட்கள் வழங்கும் நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களில் இந்த செட்டிநாட்டு பலகாரங்களுக்கு அதிக அளவில் விற்பனை நடைபெறும். அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே இந்த செட்டிநாடு பலகாரங்களுக்கு தனி மவுசும் அதிகரிக்கும். 
அதற்கு காரணம் இங்கு தயாரிக்கப்படும் இந்த பலகாரங்கள் கை பக்குவத்தில் எவ்வித கலப்படமும் இல்லாமல் சுத்தமாக தயாரிக்கப்படுவது ஆகும். அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்றளவும் செட்டிநாடு பலகாரங்களும் அவ்வாறே அமைந்துள்ளது. 
இங்கு 5 முதல் 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு, அதிரசம், மணகோலம், மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, பிரண்டை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு மற்றும் ஜாங்கிரி உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனால் பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மும்முரம் 
ஏற்கனவே கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் அவ்வப்போது மீண்டும் தொடங்கிய இந்த பணி தற்போது தீபாவளி பண்டிகையால் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்த பலகாரங்கள் காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இந்த பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கோட்டையூரைச் சேர்ந்த மெய்யம்மை ஆச்சி கூறியதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக  செட்டிநாடு பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். பெரும்பாலும் பெண்களே ஈடுபடுவதால் மிகவும் சுத்தமாகவும், கை பக்குவமாகவும் பலகாரங்களை தயாரித்து வருகிறோம்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக எங்களது இந்த தொழில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிைககள் வந்ததால் மீண்டும் அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த பலகாரங்கள் தயாரிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் கையால் தயார் செய்யப்பட்ட மாவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் சுத்தமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த பலகாரங்கள் 3 மாதம் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். 
மேலும் இந்த பலகாரம் தயாரிப்பு பணிக்கு பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்புகள் பயன்படுத்துவதால் அதன் சுவையும் அதிகரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்டு தயாரான பலகாரங்கள் பேக்கிங் செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
தற்போது எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் அதே விலையை பலகாரங்களுக்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்ய உள்ளோம். அதன்படி முறுக்கு மற்றும் அதிரசம் ஒன்றிக்கு ரூ.8, மணகோலம், சீடை, தட்டை, இனிப்பு சீடை கிலோ ரூ.260, சீப்பு சீடை, ஓலை பக்கோடை ஆகியவை கிலோ ரூ.280, பிரண்டை முறுக்கு, மாவு உருண்டை, முல்லு முறுக்கு ஆகியவை ஒன்றுக்கு தலா ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாங்கள் நஷ்டத்தை சந்தித்தாலும் தொழிலை மேம்படுத்தும் வகையில் விற்பனை செய்ய உள்ளோம். ஏற்கனவே கடந்த காலங்களில் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆர்டர்கள் மூலம் பலகாரங்களை பெற்றுச்சென்றனர். 
கோரிக்கை 
தற்போது அவர்கள் ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டைபோல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு தயாரிக்கப்படும் இந்த பலகாரங்களை வாங்குவதற்காக ஆர்டர்கள் கேட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் இங்கு தயாரிக்கப்படும் இந்த பலகாரங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story