ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்  திரளான பக்தர்கள்  சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Oct 2021 12:08 AM IST (Updated: 21 Oct 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விராலிமலை:
அன்னாபிஷேகம்
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பவுர்ணமியில் சிவன்கோவில்களில் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. பவுர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பவுர்ணமியன்று அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும் என ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவேங்கைவாசல் சிவன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூமீஸ்வரர் சிவன்கோவிலில்
விராலூரில் பிரசித்திபெற்ற பூமீஸ்வரர் சிவன்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை பூமீஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதேபோல் விராலிமலை மலைமேல் உள்ள முருகன் கோவிலில் உள்ள சிவன் மற்றும் ராஜாளிப்பட்டியில் உள்ள சிவன்கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருமயம்
திருமயம் அருகே கோட்டையூரில் குடவரை கோவிலான குடைவரை ஈஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு  அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னாபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆதனக்கோட்டை
பெருங்களூர் கிராமத்தில் அமைந்துள்ள வம்சோத்தாரகர் சிவாலயத்தில் அன்னாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் வம்சோத்தாரகர் உடனுறை மங்களநாயகியம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு சாற்றப்பட்ட சாதம் அனைத்தும் முத்தூரணி தீர்த்தக்குளக்கரையில் கரைக்கப்பட்டது.
இதேபோல் ஆதனக்கோட்டை காசிவிசுவநாதர் கோவில், சோத்துப்பாழை கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவரங்குளம்
திருவரங்குளத்தில் சோழர்காலத்தில் சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்க பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னத்தால் சிவபெருமானுக்கு சாற்றப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க மகா தீபம் காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமான் மீது சாத்தப்பட்ட சாதத்தை தெப்பக்குளத்தில் மீன்களுக்கு இறையாக போடப்பட்டது.
கந்தர்வகோட்டை, ஆலங்குடி 
கந்தர்வகோட்டையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆபத்சகாயேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவர் மீது சாற்றப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
ஆலங்குடியில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டு சாமி தரிசனம் செய்தளர். பின்னர் இரவு 8 மணிக்கு அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு ஒரு பகுதி சாதம் திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. மற்றொரு பகுதி சாதம் கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டும், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் 
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் அம்புக்கோவில் பக்தலலிதேஸ்வரர் உடனுறை தாயினும் நல்லாள் கோவில், கறம்பக்குடி முருகன் கோவில் ஆகியவற்றிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story