கார் மோதி பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை பலி
காரியாபட்டி அருகே மொபட் மீது கார் மோதியது. இதில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
காரியாபட்டி
காரியாபட்டி அருகே மொபட் மீது கார் மோதியது. இதில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
அரசு பள்ளி ஆசிரியை
விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி விஜயமாலினி(வயது 48). இவர் காரியாபட்டி அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று விஜயமாலினி பள்ளிக்கு செல்வதற்காக விருதுநகரில் இருந்து சொக்கம்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் வக்கணாங்குண்டு குண்டாற்று பாலத்தில் சென்றபோது அவருக்கு பின்னால் கார் ஒன்று வந்தது.
பாலத்தில் இருந்து விழுந்தார்
இந்த காரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த செந்தூர் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் விஜயமாலினியின் மொபட் மீது மோதியது.
இதில் மொபட் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் மொபட் பாலத்தின் மேலே கிடக்க, அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட விஜயமாலினி பாலத்தின் கீழே சுமார் 30 அடி பள்ளத்தில் போய் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லாங்கிணறு போலீசார் விஜயமாலினியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story