சுவரில் துளையிட்டு வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்
போலீஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியின் சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
திருமங்கலம்,
போலீஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியின் சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
கொள்ளை முயற்சி
மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் எதிரே தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை ஊழியர்கள் வங்கியை திறந்தபோது உள்பக்கம் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உயர் அதிகாரிகளுக்கும் திருமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வங்கி லாக்கரை திறந்து பார்த்தனர். அப்போது பணம்-நகை கொள்ளை போகவில்லை என தெரியவந்தது. இதனால் வங்கி அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
வங்கியின் சுவரை உடைத்து உள்ளே புகுந்தது யார்?என போலீசார் விசாரணையை தொடங்கினர். வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வங்கியின் சுவரை, நீண்ட நேரமாக உடைத்து துளையிட்டு உள்ளே நுழைகின்றனர். முகத்தை துணியால் மறைத்து இருந்தார்கள்.
அந்த ஆசாமிகள் லாக்கரையும் உடைக்க நீண்ட நேரமாக போராடினார்கள். அதனை உடைக்க முடியவில்லை. அதனால் 2 பேரும் திரும்பி சென்றனர். இந்த பரபரப்பு காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
தேடுதல் வேட்டை
மேற்கண்ட தனியார் வங்கி, திருமங்கலம் பஸ் நிலைய பகுதியில் உள்ளது. அங்கு. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதன் அருகிலேயே திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் உள்ளது.
அப்படிப்பட்ட இடத்தில் உள்ள வங்கி சுவரில் துளையிட்டு, கொள்ளையர்கள் துணிகரமாக கைவரிசை காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இது தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story