குமரியில் மீண்டும் பரவலாக மழை


குமரியில் மீண்டும் பரவலாக மழை
x
தினத்தந்தி 21 Oct 2021 1:59 AM IST (Updated: 21 Oct 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஊருக்குள் புகுந்த வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் குமரியில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
ஊருக்குள் புகுந்த வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் குமரியில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்ததால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. ஆனால் அணைகள் ஏற்கனவே நிரம்பி இருந்ததால் அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல தயாராகினர். இதற்கிடையே கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
கரையோர மக்கள் விழிப்புடன்
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது. நாகர்கோவிலிலும் மதியம் 2 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் அதிகமாக சென்றது. ஏற்கனவே பெய்த மழைக்கு குழித்துறை தாமிரபரணி, பரளியாறு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் ஊருக்குள் புகுந்த வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இந்த மழை நீடித்தால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் விழிப்புடன், கவனமாக இருக்குமாறு அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அணைகளுக்கு நீர்வரத்து
பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,593 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,368 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து 536 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இந்தநிலையில் வானிலைஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி மழை நீடித்தால் அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீர் வெளியேற்றப்படும். எனவே அணைகளுக்கு வரும் தண்ணீரை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story