கொத்தனார் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது


கொத்தனார் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 2:09 AM IST (Updated: 21 Oct 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

கொத்தனார் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஆட்டையாம்பட்டி, அக்.21-
ஆட்டையாம்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கொத்தனார் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
கொலை வழக்கு
 சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே கல்பாரப்பட்டி கொம்பாடிபட்டி மேட்டு பகுதியில் கடந்த1999-ம் ஆண்டு சுரேந்திரன் என்ற கொத்தனார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு ெதாடர்பாக அவருடன் கொத்தனாராக வேலை பார்த்து வந்த சுபாஷ் என்ற சுபாஷ் சந்திரபோஸ், கணேசன், பாலு, மூர்த்தி என்ற ஜான் விக்டர் (வயது 41) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
மூர்த்திக்கு மல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு சுரேந்திரன் இடையூறாக இருந்ததால் அவரை திட்டமிட்டு மூர்த்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மூர்த்தி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்ட நிலையில், மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூர்த்தி மீதான வழக்கு விசாரணையை மட்டும் தனியாக நடத்தும் வகையில் மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த 2006-ம் ஆண்டு சுபாஷ், கணேசன், பாலு ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக மூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்தார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு கைது 
இதனிடையே சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பொறுப்பேற்ற பிறகு, தேடப்படும் பழைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இதையடுத்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த மூர்த்தி என்ற ஜான் விக்டரை தேடும் பணியில் ஆட்டையாம்பட்டி தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 
இதனிடையே திருப்பூரில் குடும்பத்துடன் தலைமறைவாக வசித்து வந்த மூர்த்தி சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனது தாயாரை பார்க்க வருவதை அறிந்த போலீசார், ரகசியமாக கண்காணித்து அவரை கைது செய்தனர். இதையடுத்து 22 ஆண்டுகளாக கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூர்த்தியை கைது செய்த போலீசாரை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பாராட்டினார்.

Next Story