சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்


சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 21 Oct 2021 2:12 AM IST (Updated: 21 Oct 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

சேலம், அக்.21-
சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரபுரநாதர் கோவில்
சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கரபுரநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஓமலூர்
ஓமலூர் கோட்டையில் வசந்தீஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அன்னாபிஷேகம் தொடங்கியது. சாமிக்கு ஒரு மணி நேரம் அன்னாபிஷேக அலங்காரம் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11.30 மணிக்கு அன்னாபிஷேக அன்னம் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டினை சரபங்கா முனிவர் ஆன்மிக நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் பண்ணப்பட்டியில் உள்ள குபேரலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேச்சேரி பசுபதீஸ்வரர் 
நங்கவள்ளியில் பழமையான சவுந்தரவல்லி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி சோமேஸ்வரர் சாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் பசுபதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
மேலும் மல்லிகார்ஜுனர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த அன்னம் பக்தர்கள் மற்றும் பறவை, மீன்களுக்கு வழங்கப்பட்டது
எடப்பாடி
எடப்பாடியில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதேபோல் பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், வெள்ளாண்டிவலசு முல்லை வனநடராஜர் கோவில், நடுத்தெரு சிவன் கோவில் மற்றும் சுற்றுவட்டார சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம்
சேலம் தாதகாப்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவன்னிநாதர் கோவிலில் ஐப்பசி மாத பவுணர்மியையொட்டி நேற்று இரவு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக திருவன்னிநாதருக்கு காய்கறி மற்றும் உணவுகளால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் பூஜை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Next Story