பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
பாவூர்சத்திரம், அக்.21-
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவருடைய மகன் கண்ணன் (வயது 14). இவன் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று கண்ணன் தனது நண்பர்களுடன் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டின் அருகில் உள்ள நாகல்குளத்துக்கு குளிக்க சென்றான்.
குளத்தில் மூழ்கி பலி
குளத்தில் குளித்துக் ெகாண்டிருந்தபோது, கண்ணன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ெதன்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story