மும்பையில் ஹை-டெக் விபசாரம் ; “செக்ஸ் சுற்றுலா” நடத்திய 2 பெண்கள் அதிரடி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 21 Oct 2021 11:35 AM IST (Updated: 21 Oct 2021 11:35 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர்களுடன் அழகிகளை சுற்றுலா தலங்களுக்கு அனுப்பி ஹை-டெக் முறையில் செக்ஸ் சுற்றுலா நடத்திய 2 பெண்களை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை, 

வாடிக்கையாளர்களுடன் அழகிகளை சுற்றுலா தலங்களுக்கு அனுப்பி ஹை-டெக் முறையில் செக்ஸ் சுற்றுலா நடத்திய 2 பெண்களை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

செக்ஸ் சுற்றுலா

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், சபல புத்தி உடையவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி சுலபமாக பணத்தை அள்ளி வரும் செக்ஸ் தொழிலில் காலத்திற்கு ஏற்றார்போல் புதிய யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹை-டெக் முயற்சியாக “செக்ஸ் சுற்றுலா” நடத்தி பணம் குவித்து வந்த 2 பெண்கள் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். 

இதுபற்றிய கிளுகிளுப்பான தகவலை போலீசார் வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

மும்பையில் கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் மீட்கப்பட்ட பெண் ஒருவர், செக்ஸ் சுற்றுலா என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தங்கள் கைவசம் உள்ள அழகிகளை நாட்டின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு உல்லாசத்திற்காக அனுப்பி வைப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. 

வலைவிரித்த போலீஸ்

இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். இதன்படி செக்ஸ் சுற்றுலா நடத்தி வரும் முக்கிய குற்றவாளியான பெண்ணை போலி வாடிக்கையாளர்கள் மூலம் அணுகினர். இந்த போலி வாடிக்கையாளர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். போலி வாடிக்கையாளர்கள் தாங்கள் இருவரும் கோவாவுக்கு செக்ஸ் சுற்றுலா செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். அப்போது, தலா ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று அப்பெண் கூறினார். இது தொடர்பாக நடத்திய பேரத்தில் ஒருவருக்கு ரூ.45 ஆயிரம், மற்றொருவருக்கு ரூ.40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த தொகையும் கைமாறியது.

ஆனால் போலீசாரின் சதி வலை என தெரியாத விபசார தொழில் நாயகி, தான் பேசியபடி 2 அழகிகளை அழைத்து கொண்டு மும்பை விமான நிலையம் வந்தார். அங்கு போலீசார் அனுப்பிய போலி வாடிக்கையாளர்களும் வந்தனர். வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்க 2 அழகிகளுடன் வந்த அந்த பெண் விமானத்தில் பறக்க விமானம் புறப்படும் நுழைவு வாயிலுக்கு சென்றார்.
மடக்கி பிடித்தனர்
இந்தநிலையில் தான் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் 2 அழகிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை நடந்தது. மேலும் பெண் கொடுத்த தகவலின் பேரில் அவரது விபசார தொழில் கூட்டாளியான மற்றொரு பெண்ணையும் போலீசார் பிடித்தனர். 2 பெண்களையும் அதிரடியாக கைது செய்தனர். 

அவர்களை நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்தனர். மேலும் பிடிபட்ட அழகிகள் இருவரையும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பரபரப்பு தகவல்

இதற்கிடையே செக்ஸ் சுற்றுலா பெயரில் விபசாரம் தொழில் நடத்திய 2 பெண்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
இவர்களது செக்ஸ் சுற்றுலா திட்டத்தின் படி, நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு 2 நாள் உல்லாச பயணமாக வாடிக்கையாளருடன் அழகியை அனுப்பி வைப்பார்கள். இதற்காக வாடிக்கையாளருக்கு அழகிகளின் படங்களை செல்போன் மூலம் அனுப்பி வைப்பார்கள். அதில் ஒரு அழகியை வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும். செக்ஸ் சுற்றுலா செல்லும் இடத்தையும் வாடிக்கையாளர் முடிவு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் பேரம் பேசப்பட்டு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்து கொள்வார்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவருக்கும், அவருடன் வரும் அழகிக்கும் விமான டிக்கெட் எடுக்க வேண்டும். 2 நாள் உல்லாச சுற்றுலாவிற்கு ஆகும் இதர அனைத்து செலவுகளையும் வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தான் 2 பெண்கள் நடத்தி வந்த செக்ஸ் சுற்றுலாவின் சாராம்சம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

வாடிக்கையாளர்கள் பலரும் தாங்கள் உல்லாசம் அனுபவிக்க கோவாவை விருப்ப இடமாக தேர்வு செய்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். 

தீவிர விசாரணை 

இந்த செக்ஸ் சுற்றுலாவில் விழுந்தவர்கள் பிரபல தொழில் அதிபர்களும், உயர் பதவி வகிப்பவர்களும் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செக்ஸ் சுற்றுலா நடத்தி கைதாகி உள்ள 2 பெண்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். விசாரணையில் மேலும் பல கிளுகிளுப்பான தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை போலீசார் ரகசிய வேட்டையாடி செக்ஸ் சுற்றுலாவை அம்பலப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story