எட்டயபுரம் அருகே புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
எனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்
எட்டயபுரம்:
‘எனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது' என்று புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருேக உள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் சூரியராகவன் (வயது 31). இவர் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரி எதிரே டி.வி. மெக்கானிக் கடை வைத்து உள்ளார். இவரும் மகாலட்சுமி என்பவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (22). ஆடு, மாடுகளை வளர்த்து வந்த இவர், அவ்வப்போது ஆடுகளை அறுக்கும் தொழிலுக்கும் சென்று வந்தார்.
தலை துண்டித்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கடையை திறந்து சூரியராகவன் உள்ளே சென்றார். அப்போது, அங்கு வந்த ஆனந்தராஜ் திடீரென்று மிளகாய் பொடியை சூரியராகவன் கண்ணில் தூவி கீழே தள்ளினார். பின்னர் தான் கொண்டு வந்த ஆடு அறுக்கும் கத்தியால் சூரியராகவன் கழுத்தை அறுத்து தலை துண்டித்து படுகொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆனந்தராஜை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆனந்தராஜ் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-
நான் மகாலட்சுமியை ஒரு தலையாக காதலித்து வந்தேன். ஆனால் அவர் சூரியராகவனை காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது எனக்கு ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் 2 பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினேன். முதலில் மகாலட்சுமியை தான் கொலை செய்ய முடிவு செய்தேன். அவர் சென்று வரும் இடங்களை கண்காணித்து வந்தேன்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எட்டயபுரம் பஸ் நிலையத்திற்கு மகாலட்சுமி வந்தார். அப்போது, அவரை கொலை செய்ய முயன்றேன். ஆனால் அந்த சமயத்தில் எட்டயபுரம் போலீசார் ரோந்து பணிக்கு வந்ததால், என்னால் கொலையை அரங்கேற்ற முடியவில்லை. இதனால் மகாலட்சுமியை கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டேன்.
வீட்டில் வைத்து கொலை செய்ய...
இதனால் சூரிய ராகவனை கொைல செய்ய திட்டமிட்டேன். அவரது கடைக்கு சென்று வீட்டில் டி.வி. பழுதாகிவிட்டது. அதை வீட்டில் வந்து சரிசெய்து தரும்படி கேட்டேன். அவ்வாறு அவர் வந்தால் வீட்டில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால் சூரியராகவன் வேலைகள் இருப்பதால் வீட்டிற்கு வந்து சரிசெய்ய முடியாது. எனவே நீங்கள் டி.வி.யை கடைக்கு கொண்டு வரும்படி சூரிய ராகவன் கூறினார். இதையடுத்து டி.வி.யை அவரது கடைக்கு கொண்டு சென்று, அவருடன் பழகினேன். தினமும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தேன்.
நேற்று முன்தினம் சூரியராகவன் டி.வி. பழுதுநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார். நான் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து உடனடியாக பையில் 2 ஆடு அறுக்கும் கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன்.
யாருக்கும் கிடைக்கக்கூடாது
அங்கு கடையை திறந்து உள்ளே சென்ற சூரிய ராகவனின் பெயரை அழைத்து முகத்தில் மிளகாய் பொடியை தூவி கீழே தள்ளி தலையை துண்டித்து கொலை செய்தேன். எனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற விரக்தியில் இந்த கொலையை செய்தேன்.
பின்னர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பதுங்கி இருந்த என்னை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவ்வாறு ஆனந்தராஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story