திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
அகற்ற வேண்டும்
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிகளிலும் மற்றும் உதயேந்திரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய்களை தூய்மைபடுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று குப்பைகளை பெறவேண்டும். நகராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் தூய்மையாக பராமாரிக்க வேண்டும். அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பேரூராட்சிகள், நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழைமையான கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கை தயார்செய்து வழங்க வேண்டும். அதேபோல் நூலகங்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்கள்
4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்குட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் நன்றாக உள்ளதா என ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிசெய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் குபேந்திரன், நகராட்சி ஆணையர்கள் (பொறுப்பு) ராஜேந்திரன், தனபாண்டியன், உதவி செயற்பொறியாளர் அம்சா, நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சேகர், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story