ரூ.55 லட்சத்தில் நேரு பூங்காவை மேம்படுத்தும் பணி மும்முரம்
கோத்தகிரியில் ரூ.55 லட்சத்தில் நேரு பூங்காவை மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. அங்கு சுற்றுச்சுவர், செயற்கை நீரூற்று அமைக்கப்படுகிறது.
கோத்தகிரி
கோத்தகிரியில் ரூ.55 லட்சத்தில் நேரு பூங்காவை மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. அங்கு சுற்றுச்சுவர், செயற்கை நீரூற்று அமைக்கப்படுகிறது.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இது கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை இருக்கின்றன.
இங்கு ஆண்டுதோறும் கோடைவிழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இது மட்டுமின்றி உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா விளங்கி வருகிறது.
ரூ.55 லட்சம் ஒதுக்கீடு
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால், அடுத்த கோடை சீசனுக்கு முன்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
சுற்றுச்சுவர்
இதையடுத்து பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்காவில் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.
இதனை தடுக்க சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
மேலும் நுழைவு கட்டண அறை, கடைகள், செயற்கை நீரூற்று, விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், கழிப்பிட பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story