வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்
வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டுக்கு பாதை இல்லை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள கருடபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலிவேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வடக்கு பகுதியில் சுடுகாடு உள்ளது. ஆனால் அந்த சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் கிராம மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் வயல்வெளி வழியாக உடலை கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாய நில உரிமையாளருக்கும், உடலை கொண்டு செல்பவர்களுக்கும் இடையே தகராறு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து அமைச்சர், கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் என அனைவரிடமும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது தாசில்தார் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story