கொடைக்கானல் பகுதியில் கனமழை வீட்டின் மீது இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் தாய் மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பின


கொடைக்கானல் பகுதியில் கனமழை வீட்டின் மீது இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்   தாய் மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பின
x
தினத்தந்தி 21 Oct 2021 9:44 PM IST (Updated: 21 Oct 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் கனமழையால் தடுப்புச்சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்தது. இதில் தாய், மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இடியுடன் கூடிய மழை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் 43.7 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.
இந்த தொடர் மழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் 19.5 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 21 அடி). புதிய அணையின் நீர்மட்டம் 22.5 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 36 அடி). கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டியது. நட்சத்திர ஏரியில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறி ஏரிச்சாலையை சுற்றிலும் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கனமழை காரணமாக இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 30 அடி உயரமுள்ள நடைபாதை தடுப்பு சுவரின் ஒரு ப‌குதி இடிந்து அருகே உள்ள சின்னப்பொண்ணு என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பொண்ணுவும், அவரது 3 மகள்களும் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த‌ன‌ர். இதனிடையே கணவரை இழந்து மகள்களுடன் தனியாக வசித்து வரும் சின்னபொண்ணுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story