திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 22 அடியை எட்டியது


திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம்  22 அடியை எட்டியது
x
தினத்தந்தி 21 Oct 2021 9:49 PM IST (Updated: 21 Oct 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் காமராஜர் அணையை பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.
இந்த காமராஜர் அணை, ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் குடகனாறு, கூழையாறு ஆகிய ஆறுகளின் தண்ணீர் அணைக்கு வருகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 23½ அடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் இறுதியில் காமராஜர் அணை நிரம்புவது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்தது. இதனால் காமராஜர் அணையில் 15 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருந்தது.
வேகமாக நிரம்புகிறது 
இந்த நிலையில் கடந்தசில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதில் காமராஜர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்த வண்ணம் இருந்தது. அதிலும் கடந்த சில நாட்களாக அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தபடி இருக்கிறது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அந்த வகையில் நேற்று அணையின் நீர்மட்டம் 22.4 அடியை எட்டியது. மேலும் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தபடி உள்ளது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுக்குள் அணை நிரம்பி விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story