இரிடியம் இருப்பதாக ஏமாற்றியது எப்படி போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்


இரிடியம் இருப்பதாக ஏமாற்றியது எப்படி போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:41 PM IST (Updated: 21 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

இரிடியம் இருப்பதாக ஏமாற்றியது எப்படி போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்


பித்தளை செம்பை காண்பித்து இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்தது எப்படி என்பது குறித்து கோவை போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார்.

கோவையில் இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றியதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கோவை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறியதாவது:-

பித்தளை செம்பு

முருகேசன், தினேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் ரூ.1,500 கொடுத்து ஒரு பித்தளை செம்பை கடையில் இருந்து விலைக்கு வாங்கி உள்ளனர். பின்னர் இந்த பித்தளை செம்பை, தீயில் கருக்கி பார்ப்பதற்கு பழங்காலத்து பித்தளை செம்பு போல் காட்சி அளிக்கும்படி மாற்றி உள்ளனர். 

இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ள கேரளாவை சேர்ந்த ஷாஜின், தனக்கு பழக்கமான மகரூப், அப்துல்கலாம் ஆகியோரிடம் இந்த இரிடியம் உள்ள செம்பு குறித்து எடுத்து கூறி அவர்கள் 2 பேரையும் நம்ப வைத்து இந்த கும்பலிடம் அனுப்பி வைத்து உள்ளார்.

நாடகம் ஆடினர் 

இதனை நம்பிய மகரூப், அப்துல்கலாம் ஆகிய 2 பேரும் கோவைக்கு வந்து உள்ளனர். அப்போது இந்த கும்பலை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் இரிடிய பரிசோதகர் போன்றும், முருகேசன் ஆதிவாசி போன்றும், போஜராஜ் இடைத்தரகர் போன்றும் நாடகம் ஆடி உள்ளனர். 

மேலும் இவர்கள் 3 பேருக்கும் துணையாக சூர்யா குமார், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு ஆகிய 3 பேரும் செயல்பட்டு உள்ளனர். தினேஷ் குமார் அலுமினியத்தால் ஆன கவச உடை அணிந்து கொண்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர் வைத்து உள்ளார்.

கதிர்வீச்சு

முருகேசன் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த பித்தளை செம்பை திறந்து காண்பித்ததும், யாருக்கும் தெரியாமல் அந்த அறையில் பெப்பர் ஸ்பிரே அடிக்கப்படும். இதன் காரணமாக கவச உடை இல்லாதவர் களின் கண்களில் எரிச்சல் ஏற்படும். அத்துடன் மூச்சு திணறலும் ஏற்படும். 

எனவே இரிடியம் செம்பில் உள்ள கதிர்வீச்சு காரணமாகத்தான் இதுபோன்ற கண்எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுவதாக அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் நம்ப வைத்து உள்ளது. 

மேலும் தங்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை காண்பித்து, இந்த இரிடியம் கலந்த செம்பை வாங்க சிலர் முன்பணம் கொடுத்து உள்ளதாகவும் கூறி அவர்களை நம்ப வைத்து உள்ளனர்.

2 தனிப்படை அமைப்பு 

செம்பு இருந்த பெட்டியை திறந்ததும் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை கண்டதும் இவர்கள் அது உண்மையான இரிடியம் என்று நம்பி பணம் கொடுத்து உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஷாஜினை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் அவர்களிடம் இருந்து மோசடி பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தினேஷ்குமார் மீது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இரிடியம் தொடர்பான மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story