தீவு கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கின
பாம்பன், குந்துகால் மற்றும் தீவு பகுதிகளைச் சுற்றி உள்ள கடற்கரை பகுதிகளில் பச்சைப்பாசிகளால் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
ராமேசுவரம்,
பாம்பன், குந்துகால் மற்றும் தீவு பகுதிகளைச் சுற்றி உள்ள கடற்கரை பகுதிகளில் பச்சைப்பாசிகளால் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
பச்சை நிறம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பூங்கோறை என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பச்சைப் பாசிகள் கடலில் படர்ந்து உள்ளதால் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், புதுமடம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள கடல் கடந்த சில நாட்களாகவே பச்சை நிறமாகவே காட்சி அளித்து வருகிறது.
பாம்பன் கடல் பகுதியில் கடந்த 4 நாட்களுக்குமேல் பச்சைப் பாசிகள் அதிக அளவில் படர்ந்து கடல் நீர் பச்சை நிறமாக காட்சி அளித்து வந்தது.
கரை ஒதுங்கின
இந்தநிலையில் பாம்பன் குந்துகால் கடல் பகுதி மற்றும் குருசடை தீவு, சிங்கலி தீவுகளை சுற்றியுள்ள கரையோரத்தில் உள்ள கடல் பகுதி முழுவதிலும் நேற்று அஞ்சாலை, விளை, ஓரா, கணவாய், நண்டு உள்ளிட்ட பல வகையான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. குருசடை தீவு மற்றும் சிங்கலித்தீவு பகுதிகளை சுற்றி அதிக அளவிலான அஞ்சாலை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன. பாம்பன் குந்துகால் மற்றும் தீவுப் பகுதிகளை சுற்றி உள்ள கடல் பகுதிகளிலும் அஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் செத்து கடலில் மிதந்தன.
துர்நாற்றம்
தீவு பகுதி மற்றும் குந்துகால் கடற்கரை பகுதிகளிலும் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் நேற்று துர்நாற்றம் வீசியது. பச்சை பாசிகளால் கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மாவட்டத்தின் பல ஊர்களில் பாசிகள் படர்ந்து இருப்பதுடன் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story