திட்டங்களை செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட வேண்டும்


திட்டங்களை செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:01 PM IST (Updated: 21 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

திட்டங்களை செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செஞ்சி, 

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களால்  மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இந்திய அளவில் பாராட்டப்படும் ஒரே முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். 
உழவர்களை பாதுகாக்க தனி பட்ஜெட், மாநில உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியான நடவடிக்கை, மகளிர் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் பெறும் வகையில் திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் மையம் அமைய உள்ளது. 

செஞ்சியில் அரசு கல்லூரி 

திண்டிவனத்தில் உழவர் சந்தை கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி ரூ.6 கோடியே 90  லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வீடூர் அணை புனரமைக்கப்படுகிறது. 
செஞ்சி பகுதியில் விரைவில் அரசு கல்லூரி அமைய உள்ளது. மரக்காணம் எக்கியார்குப்பம் மீன் இறங்கு தளம் மற்றும் மேம்பாட்டு பணிகள் மற்றும் அனுமந்தை கிராமத்தில் புதிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, முதல்-அமைச்சரால் விரைவில் திறக்கப்பட உள்ளது. 

இதுவரை காணாத வளர்ச்சி 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மேம்பாட்டு பணிக்காக ரூ.2½ கோடியும், சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நடைபாதை மற்றும் சமுதாய கூடம் அமைக்க ரூ.3 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மேல்மலையனூர், வல்லத்தில் புதிய வேளாண் விரிவாக்க மையம் அமைய உள்ளது. சத்தியமங்கலத்தில் ரூ.1 கேடியே 62 லட்சத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 
எதப்பட்டு, அணையேரி, வல்லம், அனந்தபுரம், மரக்காணம், செண்டுர், ஜக்கம் பேட்டை ஆகிய 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைய உள்ளது. இவைகளின் மூலம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் இதுவரை காணாத வளர்ச்சி பாதையில் செல்கிறது. 

ஒன்றிணைந்து செயல்பட... 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் அறிவித்த 502 வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்போம். யாருடைய வெற்றியையும் தடுத்து நிறுத்தி விடக்கூடாது என்றும், யாருடைய வெற்றியையும் அபகரிக்க கூடாது என்கிற நிலையில் உறுதியாக நான் இருக்கிறேன். அதேபோல நீங்கள் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு செய்தியை எந்த முதல்-அமைச்சரும் அறிவித்ததில்லை. இன்று எதிர்க்கட்சியில் உள்ள சகோதரர்கள் கூட உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தெளிவாகவும் நேர்மையாகவும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதாக கூறுகின்றனர்.
வெளிப்படைத்தன்மையாக ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி தேர்தலையும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்திக் காட்டியிருக்கிறார். அரசின் திட்டங்களை செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

Next Story