மின் விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்


மின் விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:19 PM IST (Updated: 21 Oct 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குமாரசாமி அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி மின் விபத்துகள் ஏற்படாதவண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பழுது போன்ற புகார்களை 24 மணி நேரமும் சென்னை தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மின்னகம் இலவச அழைப்பு எண்ணான 94987 94987-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மண்டல அளவில் உள்ள வாட்ஸ்-அப் எண்ணான 94458 55768 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

அறிவுரைகள்

மேலும் அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். இடி- மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும், கால்நடைகளையும் கட்ட வேண்டாம். இடி- மின்னலின்போது தஞ்சம் அடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுங்கள். மின் பாதைகளுக்கு அடியிலோ, மின் மாற்றிகளுக்கு அருகிலோ கனரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றுவதோ, இறக்குவதோ கூடாது. அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். இந்த அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றி செயல்பட்டு மின் விபத்துகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story