காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்தடையால் மக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மின் வசதியும், குடிநீர் வசதியும் இல்லாமல் பெரும் அவதி்க்கு உள்ளாகினர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
காலிக்குடங்களுடன் சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று ஆனந்தக்குடி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மயிலாடுதுறை - காளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நடந்தே சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story