தளி அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை- போலீஸ் நிலையத்தில் கணவர் சரண்


தளி அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை- போலீஸ் நிலையத்தில் கணவர் சரண்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:34 PM IST (Updated: 21 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
குடும்ப தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள குஞ்சிகிரிபாளையத்தை சேர்ந்தவர் ரூபா (வயது 31). இவருக்கும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கணவன்-மனைவி 2 பேரும் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக்கிற்கு நாளடைவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
தாய் வீட்டிற்கு சென்றார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தை இறந்ததால் ரூபா தனது பெற்றோர் வீடான குஞ்சிகிரிபாளையத்திற்கு சென்றார். அங்கு தனது குழந்தைகளுடன் இருந்த அவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியின் வீட்டிற்கு சென்ற கார்த்திக் அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் ரூபா வர மறுத்து விட்டார். இரவில் மனைவி வீட்டில் கார்த்திக் தூங்கினார். 
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் குழந்தைகள் அருகில் உள்ள வீட்டிற்கு விளையாட சென்றனர். ரூபாவின் தாயாரும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் கார்த்திக் தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
கழுத்தை அறுத்து படுகொலை
அப்போது அவர் வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அங்கிருந்த கத்தியால் ரூபாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மனைவியை கொன்ற கார்த்திக் நேராக தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு போலீசாரிடம் சரண் அடைந்தார். 
அவரிடம் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் அங்கு சென்று கொலையான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story