இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 2 ஆயிரம் பேர் குவிந்தனர்


இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 2 ஆயிரம் பேர் குவிந்தனர்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:09 PM GMT (Updated: 21 Oct 2021 6:09 PM GMT)

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 2 ஆயிரம் பேர் குவிந்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதுவரை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், 4 கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்த நிலையில் இறுதிக்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இறுதிக்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்க சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்லூரியில் குவிந்தனர். உடனே அங்கு போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாணவ- மாணவிகள் எந்த பிரிவில் சேர உள்ளனர் என்பது குறித்து தனித்தனியாக அந்தந்த துறைகளில் விண்ணப்ப எண் உள்ளிட்ட விவரங்களை எழுதி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பிற்பகல் வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தினை அளித்துவிட்டுச்சென்றனர். மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவ- மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிக்கட்ட கலந்தாய்வில் குறிப்பிட்ட இடங்களுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் வந்ததால் அனைவருக்கும் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் இடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story