இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் உடலை தாயகம் கொண்டு வரக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதம் இறந்தவர் குடும்பத்திற்குரூ.20 லட்சம் வழங்க வலியுறுத்தல்


இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் உடலை தாயகம் கொண்டு வரக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதம் இறந்தவர் குடும்பத்திற்குரூ.20 லட்சம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:40 PM GMT (Updated: 2021-10-22T00:10:16+05:30)

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் உடலை தாயகம் கொண்டு வரக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம்:
மீனவர் பிணமாக மீட்பு 
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது விசைப்படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், படகு கடலுக்குள் மூழ்கியது. இதில் இலங்கை கடற்படையினர் சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை கைது செய்து இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மாயமான ராஜ்கிரண் மட்டும் நேற்று முன்தினம் பிணமாக மீட்கப்பட்டார். 
இந்நிலையில் இறந்த மீனவரின் உடலை உடனே தாயகம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் மீனவர்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆனால் மீனவர் உடல் இன்னும் தாயகம் கொண்டுவரப்படவில்லை.
ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்
இதைதொடர்ந்து நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில், இறந்த மீனவர் ராஜ்கிரண் உடலை உடனே தமிழகம் கொண்டு வர வேண்டும். கைது செய்யப்பட்ட 2 மீனவர்களும் உடனே விடுவிக்கப்பட வேண்டும். இறந்த ராஜ்கிரண் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், ராஜ்கிரணின் மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். கடலில் மூழ்கிய விசைப்படகின் உரிமையாளருக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும். இறந்த மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வந்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் ஆலோசனை 
போராட்டத்தின் பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சாமுவேல் ஞானம், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு உள்ளிட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
திருச்சி மீன்வளத்துறை இணை இயக்குனர் சர்மிளா, புதுக்கோட்டை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு மீனவரின் உடலை தாயகம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
மீனவர் உடல்இன்று வரக்கூடும்
கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ராஜ்கிரண் இறந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மீனவரின் உடல் எப்போது தாயகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மீனவரின் உடலை நாளை (அதாவது இன்று) இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று இந்திய கடற்படையிடம் ராஜ்கிரண் உடலை பெற்று கோட்டைப்பட்டினம் பகுதிக்கு கொண்டு வரக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மீனவர் ராஜ்கிரணின் உடல் இன்று மாலை கோட்டைப்பட்டினம் பகுதிக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story