சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
ஆர்ப்பாட்டம்
சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் தம்பிசிவம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாகக்குழு தண்டபாணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டம்
கொரோனா காலகட்டத்தில் உயிரை துச்சமென நினைத்து மகத்தான பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி செய்த காலத்திலிருந்து கொடுக்கப்படாமல் இருந்து வரும் சேமநல நிதி இ.பி.எப். வட்டியுடன் கூடிய இருப்புக்கணக்கு மற்றும் புதிய பங்களிப்பு ஓய்வூதியம் தொகை வழங்க வேண்டும்.
2017-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 53 மாதங்களுக்கு கலெக்டர் அறிவித்த தினக்கூலி சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இ.எஸ்.ஐ. அட்டை
துப்புரவு தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. அட்டை வழங்கி மருத்துவ வசதி அளிக்க வேண்டும். ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்பட வேண்டிய 15 மாத இ.பி.எப். பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story