தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 21 Oct 2021 7:35 PM GMT (Updated: 21 Oct 2021 7:35 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், நவல்பட்டு அருகில் உள்ள அண்ணாநகரில் இருந்து பர்மாகாலனி-நவல்பட்டு செல்வதற்கு, புதிய கட்டளை மேட்டுக் கால்வாய் கரைச்சா சாலையைத்தான் இங்குள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக சைக்கிளில் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்நகரில் தான் வாகனங்களை பதிவு செய்யும் வட்டார சாலை போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. அதிக வாகனங்கள் வந்து போவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பெரியசாமி, அண்ணாநர், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், தளவாய் ஊராட்சி 7 வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் இருபுறமும் தேங்கி, சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 சப்தகிரி, தளவாய், அரியலூர். 

வீடுகளில் மழைநீர் புகும் அவலம் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சியை சேர்ந்த அருத்தோடிப்பட்டி கிராமத்தில் கீழ ஆற்றுக்கரையிலிருந்து தெருவிற்குள் செல்லும் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் சாலையில் சென்ற சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேக் பகுர்தீன், அருத்தோடிப்பட்டி, புதுக்கோட்டை. 

சாலை வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம்,   சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில்  பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும்போது சேறும், சகதியுமான மண் பாதையில் செல்ல வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம். 
ஜெயக்குமார், மேலவிடுதி, புதுக்கோட்டை.

ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி
பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமத்தில் துறையூர் செல்லும் சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கு பணி நடைபெற்றுவருகிறது. தற்போது சந்துகளும், சாலைகளும் இணையும் இடங்களில் குழிவெட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி காட்டுபாதையின் வழியாகவே சாலையை அடைய முடிகிறது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக இருக்கும் அப்பகுதியில் இரவு நேரங்களில் அச்சத்துடனே மக்கள் சென்று வருகிறார்கள். கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியோ ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது. உடனடியாக மக்கள் நடந்துசெல்வதற்கு பாதையை ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செஞ்சேரி, பெரம்பலூர். 

அரசு பஸ் இயக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்திலிருந்து பொன்னமராவதிக்கு செல்ல திருமயம் அல்லது புதுக்கோட்டையை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்களுக்கு அதிக சிரமமும் , அதிக நேரமமும் ஆகிறது. இதனால் அரிமளத்திலிருந்து செங்கீரை, ஆண்டிபட்டி, பூவம்பட்டி, லேணாவிளக்கு வழியாக பொன்னமராவதிக்கு அரசு பஸ்  இயக்க சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  செங்கீரை, புதுக்கோட்டை.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி கே.கே.நகர், திரு.வி.க. தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது. மின்கம்பம் முழுவதும் சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்ததால் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் பொரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.கே.நகர், திருச்சி. 

செம்மண் கலந்து வரும் குடிநீர் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பெரமங்கலம் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக மக்கள் அன்றாடம் குடிக்கும் காவிரி தண்ணீர் செம்மண் கலந்து சேறும் சகதியுமாக வருகிறது. இந்த செம்மண் தண்ணீரை பொதுமக்கள் அருந்துவதினால் வயிற்றுப்போக்கும், வயிற்று வலியும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரமங்கலம், திருச்சி. 

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் 
கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலைய பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் ரெயில் பயணிகள், பொதுமக்கள் அப்பகுதியில் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். ஆங்காங்கே தெருநாய்கள் குழந்தைகளை கடித்து குதறி வரும் நிலையில் இதுபோன்ற நிலை குளித்தலையில் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
துரைராஜ், குளித்தலை, கரூர். 


Next Story