திருச்சி மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் 6-வது கட்டமாக நாளை மெகா தடுப்பூசி முகாம் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது.
திருச்சி
தமிழகமெங்கும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 13 லட்சத்து 87 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 2-ம் தவணை தடுப்பூசி மட்டும் 5 லட்சத்து 31 ஆயிரத்து 182 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 86 ஆயிரத்து 100 ஆகும். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் 63.5 சதவீதம்.
6-வது கட்ட மெகா தடுப்பூசி
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு திருச்சி மாவட்டத்தில் 5 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 2,671 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 4 லட்சத்து 41 ஆயிரத்து 391 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து 6-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும்2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story