கர்நாடகத்தில் புதிதாக 16 ஆயிரம் போலீசார் நியமனம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் புதிதாக 16 ஆயிரம் போலீசார் நியமனம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 1:33 AM IST (Updated: 22 Oct 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 16 ஆயிரம் போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 16 ஆயிரம் போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை

போலீஸ் துறை சார்பில் உப்பள்ளியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தி பேசியதாவது:-

இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இந்த தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபடும் போலீசாரின் தியாகத்தை நினைவு கூறும் நாளாகும்.

போலீசாரின் சேவை

அமைதி இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு போலீசாரின் சேவை மிக முக்கியமாகும். போலீசாருக்கு சட்ட ரீதியாக பலம் வழங்கினால் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும். தடய அறிவியல் சோதனை ஆய்வு கூடங்கள் மண்டல அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

போலீசார் தங்களின் குடும்பங்களை மறந்து பகல்-இரவாக உழைக்கிறார்கள். போலீசாருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. கர்நாடகத்தில் புதிதாக 16 ஆயிரம் போலீசார் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆரோக்கிய பாக்கிய திட்டத்தின் கீழ் போலீசார் மருத்துவ சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் போலீஸ் துறையில் செய்யப்பட்டுள்ளன.

தற்காப்பு பயிற்சி

புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மேலும் 11 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு போலீசார் முன்னுரிமை அளிக்க வேண்டும். போலீஸ் நிலையங்கள் தோழமை எண்ணத்துடன் செயல்பட வேண்டும். 

கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

விழாவில் கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ஜவுளித்துறை மந்திரி சங்கர் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story