தீய சக்திகளை அடியோடு களைந்தெறிய வேண்டும்
சாதி பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் தீய சக்திகளை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்று கும்பகோணத்தில் கி.வீரமணி கூறினார்.
கும்பகோணம்:
சாதி பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் தீய சக்திகளை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்று கும்பகோணத்தில் கி.வீரமணி கூறினார்.
மீனவர் பாதுகாப்பு மாநாடு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எல்லைப் பிரச்சினை என்ற பெயரில் இலங்கை அரசு தனது அதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை அடக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர் பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம்.
தீய சக்திகள்
நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் நல்ல கல்வியை பெற்றுக்கொண்டு வடநாட்டில் சென்று அந்த கல்வியை பயன்படுத்துகின்றனர். அது கூடாது. விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக டெல்லியில் போராடி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதேபோன்று கூட்டுறவு துறையும் தற்போது மத்திய அரசின் கைக்கு சென்றுவிட்டது. இவ்வாறாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஏழை விவசாயிகள் இன்று கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற முடியவில்லை. விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கல்வி என்பது ஒரு சமூக முதலீடு. சிறந்த கல்வி மூலம் சமூகம் உயர்ந்த பலனை பெறும். தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் சாதி மோதல்கள் கவலையை தருகின்றன. சாதி பிரச்சினைகளின் பின்னணியில் தீய சக்திகள் மூலாதாரமாக உள்ளன.
தமிழக அரசு ஓடுக்க வேண்டும்
வடமாநில சாதி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் உருவாக்கினால் அமைதிப்பூங்காவாக உள்ள தமிழ்நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடலாம் என சில அமைப்புகள் நினைக்கின்றன. அந்த தீய சக்திகளை அரசு மக்களுக்கு வெளிக்காட்ட வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் சாதி பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் தீய சக்திகளை அடியோடு களைந்தெறிய வேண்டும். சாதிகளை முன்னிறுத்தி பிரச்சினைகளை உருவாக்குவது ஆபத்தான ஒன்று. இதனை தமிழக அரசு ஓடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story