கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது


கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
x
தினத்தந்தி 22 Oct 2021 2:47 AM IST (Updated: 22 Oct 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உள்ளது.

பெங்களூரு:கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உள்ளது.

கவுரி லங்கேஷ் கொலை

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது வீட்டின் முன்பு வைத்து மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மோகன் நாயக், அமோல் காலே, ராஜேஸ் பங்காரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், கொலையாளிகளை ஒருங்கிணைத்து கொலை செய்ததாகவும் மோகன் நாயக் மீது கர்நாடக திட்டமிட்ட குற்றம் புரிதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஆனால் தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மோகன் நாயக் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு மோகன் நாயக் மீது பதிவு செய்யப்பட்ட கர்நாடக திட்டமிட்ட குற்றம் புரிதல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து கவுரி லங்கேசின் சகோதரி கவிதா லங்கேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கூறியது. அதில் மோகன் நாயக் மீது பதிவான கர்நாடக திட்டமிட்ட குற்றம் புரிதல் வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது தவறு என்றும், அவர் மீது அந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும், மோகன் நாயக்கின் மனுவை சரியாக பரிசீலனை செய்யாமல் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியதாகவும் நீதிபதிகள் கூறினர். மேலும் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story