போலீஸ்காரரை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி; 2 பேர் கைது


போலீஸ்காரரை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 2:49 AM IST (Updated: 22 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தி சென்றபோது தடுத்ததால் போலீஸ்காரரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு: மணல் கடத்தி சென்றபோது தடுத்ததால் போலீஸ்காரரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரரை கொல்ல முயற்சி

தட்சின கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டை பகுதியில் புறநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மங்களூருவில் இருந்து பண்ட்வால் நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த போலீஸ்காரர் சேகர், ஊர்க்காவல்டை வீரர் வேணுகோபால் ஆகிய 2 பேரும் லாரியை நிறுத்தும்படி கையசைத்துள்ளனர். ஆனால் டிரைவர், லாரியை அங்கு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலி மீது மோதிவிட்டு போலீஸ்காரர் சேகரை நோக்கி லாரியை ஓட்டியுள்ளார். 

இதனால் சுதாரித்த போலீஸ்காரர் சேகர் தள்ளிவந்து விட்டார். இதையடுத்து டிரைவர், லாரியை நிறுத்தாமல் சென்றார். மேலும் அதனை தொடர்ந்து காரில் வந்த நபரும் காரை நிறுத்தாமல் போலீசாரை திட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சேகர், பண்ட்வால் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

2 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் போலீஸ்காரரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பண்ட்வாலை சேர்ந்த அப்துல் இசாக், மொய்தீன் அசார் என்பது தெரியவந்தது. மேலும், மணல் கடத்தி சென்றபோது போலீஸ்காரர் லாரியை நிறுத்துமாறு கையசைத்ததால் அவர்கள் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றதும், போலீஸ்காரர் மீது ஏற்றி கொல்ல முயன்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களிடம் இருந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கைதான 2 பேரிடமும் பண்ட்வால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story