மைசூருவில் கனமழை; சாமுண்டி மலைப்பாதையில் நிலச்சரிவு
மைசூருவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாமுண்டி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைசூரு:மைசூருவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாமுண்டி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைசூருவில் பலத்த மழை
கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, குடகு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மைசூருவில் மழை ெபய்யாமல் இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை ெபய்யும் சூழல் உருவானது.
இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு மைசூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 10 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. அத்துடன் நேற்று காலை வரை மழை தூறல் இருந்துகொண்டே இருந்தது. இதனால் மைசூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
நிலச்சரிவு
இந்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் மைசூரு சாமுண்டி மலையில் நந்தி சிலை இருக்கும் இடத்துக்கு செல்லும் சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சாலை பாதி அளவுக்கு பெயர்ந்து சரிந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அந்தப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாததால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேற்று காலை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் நந்தி சிலை இருக்கும் பகுதிக்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த சாலையில் யாரும் செல்லாமல் இருக்க இரும்பு தடுப்பும் வைக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளை...
இதையடுத்து சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டி மலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. தற்போது அதே சாலையில் வேறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மைசூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள வாகன நிறுத்துமிடத்திலும் மழைநீர் சூழ்ந்துகொண்டது.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற மூடா சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதேபோல் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மைசூரு நகரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பெட்ரோல் போடும் எந்திரம் சேதமடைந்தது. மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மைசூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story