பாளையங்கோட்டை மரப்பட்டறையில் பயங்கர தீ
பாளையங்கோட்டை மரப்பட்டறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் கே.சி.நயினார் தெருவைச் சேர்ந்தவர் மரிய அகஸ்டின் (வயது 70). இவருக்கு சொந்தமான கதவு, ஜன்னல் உள்ளிட்ட மர பொருட்கள் தயாரிக்கும் பட்டறை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் மனக்காவலன்பிள்ளை நகர் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ளது.
-
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் பட்டறையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மரப்பட்டறை முழுவதும் தீ பரவி பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த பயங்கர தீ விபத்தில் பட்டறையில் இருந்த மரம் இழைக்கும் எந்திரம், மரக்கட்டைகள், மேஜை, நாற்காலி, ஏ.சி. எந்திரம் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story