புதர்பண்டி கிடக்கும் நகராட்சி பூங்கா
புதர்பண்டி கிடக்கும் நகராட்சி பூங்கா
உடுமலை
உடுமலை நகராட்சி பூங்கா புதர் மண்டிக்கிடக்கிறது.
நகராட்சி பூங்கா
உடுமலை சர்தார் வீதியில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா முன்பு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. முன்பு தொலைக்காட்சி, செல்போன் போன்றவை இல்லாத காலத்தில் இந்த பூங்காவில் உள்ள அறையில் இருந்த ரேடியோவில் இருந்து செய்திகள் ஒலிபரப்பப்படும். இந்த செய்திகளை கேட்பதற்கும், பூங்காவில் பொழுது போக்குவதற்கும் பொதுமக்கள் வருவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிக்கப்படுவதில்லை. அதனால் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீர் ஊற்று தொட்டியும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்களுக்கான சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன. அந்தபகுதியிலும் செடிகள் அதிகம் வளர்ந்துபுதர் மண்டி கிடக்கிறது.
அத்துடன் இந்த பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாகவும், பார் ஆகவும் திகழ்கிறது. இந்த பூங்காவிற்கு அருகில் ராஜேந்திரா சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவாங்கிக்கொண்டு பூங்காவின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து, பூங்காவிற்குள் வந்து மது அருந்துகின்றனர். அதனால் பூங்காவிற்குள் ஆங்காங்கு காலி மதுபாட்டில்கள், காலி குளிர்பானபாட்டில்கள், டம்ளர்கள் ஆகியவை கிடக்கின்றன.
மேம்படுத்துவது எப்போது?
இந்த நிலையில் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த பூங்கா உள்ளிட்டு நகராட்சி பகுதியில் உள்ள 5 பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் பூமிபூஜை நடந்தது. ஆனால் 7மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.பூங்காவில் புதர்போன்று வளர்ந்துள்ள செடிகளை அகற்றிவிட்டு, அழகிய பூச்செடிகளை வளர்க்க வேண்டும். இந்த பூங்காவில் பழுதடைந்துள்ள செயற்கை நீர் ஊற்றுகளை செப்பனிடவேண்டும்.
சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களை அமைக்க வேண்டும். பழுதடைந்த சாதனங்களை மாற்றி அமைக்கவேண்டும்.பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்களும், சிறுவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
-
Related Tags :
Next Story