முதுமலையில் இருந்து மேலும் 4 கும்கிகள் வரவழைப்பு


முதுமலையில் இருந்து மேலும் 4 கும்கிகள் வரவழைப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 1:25 PM GMT (Updated: 22 Oct 2021 1:25 PM GMT)

விநாயகன் யானை ஊருக்குள் வருவதை தடுக்க முதுமலையில் இருந்து மேலும் 4 கும்கிகளை வரவழைத்து 2-வது நாளாக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர்

விநாயகன் யானை ஊருக்குள் வருவதை தடுக்க முதுமலையில் இருந்து மேலும் 4 கும்கிகளை வரவழைத்து 2-வது நாளாக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விநாயகன் யானை

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் இருந்து வெளியேறி கூடலூர் சுற்று வட்டார கிராமங்களுக்குள் விநாயகன் என்ற காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராம மக்கள் நிம்மதியை இழந்து உள்ளனர். தொடர்ந்து விநாயகன் யானையை பிடித்து முதுமலை முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீப காலமாக ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கையாக விநாயகன் யானை அட்டகாசத்தை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் 4 கும்கிகள்

அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் கிருஷ்ணா, சங்கர் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று 2-ம் கட்டமாக முதுமலையில் இருந்து வசிம், மூர்த்தி, ஜம்பு, கணேஷ் ஆகிய மேலும் 4 கும்கி யானைகள் கூடலூர்-முதுமலை எல்லையான போஸ்பாரா பகுதிக்கு அழைத்து வரப்பட்டன.

தொடர்ந்து அங்கிருந்து தொரப்பள்ளி வரை கும்கி யானைகள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து சென்று விநாயகன் யானையை தேடினர். மேலும் ஊருக்குள் நுழைவதற்காக வந்தால் கும்கி யானைகள் மூலம் விரட்ட திட்டமிட்டு இருந்தனர்.

தொடர் கண்காணிப்பு

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
விநாயகன் யானை உள்பட காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. முதுமலையில் இருந்து கூடுதலாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, விநாயகன் யானை வரும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கும்கி யானைகளை கண்டால் காட்டு யானை எளிதில் ஊருக்குள் வர வாய்ப்பில்லை. இதனால் அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை கும்கி யானைகள் கூடலூர்-முதுமலை எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story