அய்யலூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அய்யலூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Oct 2021 2:16 PM GMT (Updated: 22 Oct 2021 2:16 PM GMT)

அய்யலூர் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வடமதுரை:
அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியில் நடமாடும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. வாரத்தில் 2 நாட்கள் இங்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக குப்பாம்பட்டி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று குப்பாம்பட்டி ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் ரேஷன் கடை விற்பனையாளர் பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது குப்பாம்பட்டி பகுதியில் சர்வர் பிரச்சினை உள்ளது. இதனால் கைரேகை பதிவு எந்திரத்தில் கைரேகை சரிவர பதிவு ஆகவில்லை. மேலும் பொருட்கள் வினியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. இணையதள வசதி இல்லாத கோம்பை, காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ரசீது முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் எனவே குப்பாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கோம்பை பகுதியில் உள்ள கடைக்கு மாற்றிக்கொண்டால், ரசீது முறையில் அனைவருக்கும் முறையாக பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story