வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2021 7:52 PM IST (Updated: 22 Oct 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.


குள்ளனம்பட்டி:
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த சிந்தியா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு இன்பராஜ், தனது மனைவி வீடான குட்டத்து ஆவாரம்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே இன்பராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், கடந்த 18-ந்தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்பராஜ் நேற்று முன்தினம் இறந்தார். 
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அத்தை இறந்த துக்கம்...
இதேபோல் திண்டுக்கல் மாலப்பட்டி அருகே உள்ள தொன்போஸ்கோ நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவர், சிறு வயதிலிருந்தே தனது மாமா வீராச்சாமி வீட்டில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்தார். 
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக, பிரவுசிங் சென்டர் நடத்த முடியாமல் அவர் தவித்தார். இதற்கிடையே வீராச்சாமியின் மனைவி புஷ்பா கடந்த 5 மாதத்திற்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து அத்தை இறந்த துக்கம் மற்றும் பிரவுசிங் சென்டர் நடத்த முடியாத கவலை ஆகியவற்றால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது கார்த்திக் விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சின்னபாண்டி நேற்று அதிகாலை தெருவோரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story