படிக்கட்டில் மாணவர்கள் பயணம் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தி விட்டு இறங்கிய டிரைவரால் பரபரப்பு


படிக்கட்டில் மாணவர்கள் பயணம் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தி விட்டு இறங்கிய டிரைவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 3:25 PM GMT (Updated: 22 Oct 2021 3:25 PM GMT)

நிலக்கோட்டை அருகே படிக்கட்டில் மாணவர்கள் பயணம் ெசய்ததால் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தி விட்டு இறங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை:
வத்தலக்குண்டுவில் இருந்து நிலக்கோட்டை, அணைப்பட்டி வழியாக உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் இந்த அரசு பஸ் நிலக்கோட்டை நால் ரோட்டில் இருந்து புறப்பட்டது. அப்போது ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் பஸ்சில் ஏறினர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தனர். இதையடுத்து பஸ் டிரைவர் மாணவர்களை பஸ்சின் நடுப்பகுதிக்கு வருமாறு பல தடவை கூறினார். ஆனால் மாணவர்கள் உள்ளே வராமல் தொடர்ந்து படிக்கட்டிலேயே தொங்கி கொண்டு வந்தனர். இதனால் டிரைவர் நிலக்கோட்டை அடுத்த திரவியம் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளோடு பஸ்சை ரோட்டோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓரமாக நின்று கொண்டார். 
இதனால் பஸ்சில் இருந்த பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்களை படிக்கட்டில் நிற்காமல் பஸ்சின் உள்ளே செல்லுமாறு வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் படியில் தொங்காமல் உள்ளே சென்றனர். இதனிடையே தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மாணவர்கள்  பஸ்சின் உள் பகுதிக்குள் வந்து விட்டனர். இதையடுத்து சுமார் 20 நிமிட தாமதத்துக்கு பிறகு டிரைவர் மீண்டும் பஸ்சை  எடுத்துக்கொண்டு விக்கிரமங்கலத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story