ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 3:58 PM GMT (Updated: 22 Oct 2021 3:58 PM GMT)

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளராக இருந்த கனகராஜ் என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆவார். 

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் இந்த கொலை சம்பவம் பழிக்கு பழியாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் உறவினர்கள் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என 19 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் கூலிப்படையை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வா (43) என்பவரை போலீசார் தேடி வந்தனர். தொடர் விசாரணையில் திருச்செந்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றில் செல்வாவை போலீசார் கைது செய்து தூத்துக்குடியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதுவரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story