பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2021 9:55 PM IST (Updated: 22 Oct 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

பெருகவாழ்ந்தான், தெற்குநாணலூர் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலைமறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்:
பெருகவாழ்ந்தான், தெற்குநாணலூர் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலைமறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சாலைமறியல் 
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் மற்றும் தெற்கு நாணலூர் கிராம விவசாயிகளுக்கு கடந்த 2020-2021-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை விடுப்பட்டுள்ளது. இந்தநிலையில் விடுபட்ட 2 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி பெருகவாழ்ந்தான் கடைவீதியில் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஜி.கே.குணசேகரன், முருகானந்தம், தெற்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எழிலரசன், கருத்திருமன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை 
அப்போது விவசாயிகளுக்கு உரிய பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது என கூறி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்ததும் பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், கோட்டூர் வேளாண்துறை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், விரிவாக்க அலுவலர் துர்க்கா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு 
இ்தில் 15 நாட்களில் பயிர்க் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இ்ந்த மறியல் போராட்டத்தால் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Next Story