நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை


நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்  வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 22 Oct 2021 10:00 PM IST (Updated: 22 Oct 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நாமக்கல்:
நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
கட்டுமான நிறுவனம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கோலாரம் ஊராட்சி வாவிபாளையத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். மேலும் பி.எஸ்.டி. என்ற கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் அலுவலகம் நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் உள்ளது. இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே புகார் எழுந்தது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அதன்படி, நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையத்தில் உள்ள அவரது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று அதிகாலையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையிலான போலீசார் சோதனைக்காக நுழைந்தனர். பின்னர் அலுவலக நுழைவுவாயில்களில் உள்ள கதவுகள் அடைக்கப்பட்டன. நல்லிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இதேபோல் பரமத்திவேலூர் அருகே கோலாரம் ஊராட்சி வாவிபாளையத்தில் உள்ள தென்னரசுவின் வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளின்போது பி.எஸ்.டி. நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 9 மணிக்கு மேலாக நீடித்தது. 
சோதனையில் ஏதேனும் ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். 

Next Story